சித்ரா இறப்பதற்கு முன் செல்போனில் நடந்த வாக்குவாதம்.. இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன? நாளைமுதல் ஆர்டிஓ விசாரணை ஆரம்பம்!

சித்ரா இறப்பதற்கு முன் செல்போனில் நடந்த வாக்குவாதம்.. இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன? நாளைமுதல் ஆர்டிஓ விசாரணை ஆரம்பம்!


Serial actress chithra suicide case RDO investigation starts

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான வழக்கில் நாளை முதல் ஆர்.டி.ஓ விசாரணை தொடங்க உள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த சித்ரா கடந்த 9ஆம் தேதி ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்றுவரை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. மிகவும் தைரியமான பெண் என அனைவராலும் கூறப்படும் சித்ரா, ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது. அதேநேரம், இது கொலையாக கூட இருக்கலாம் எனவும் கருத்துக்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

VJ Chithra

இந்நிலையில் தாய் மற்றும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஆகியோர் கொடுத்த மனஅழுத்தமே சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஹேம்நாத், சித்ராவுடன் நடித்த சக நடிகர்கள், அவரது நண்பர்கள், அவர் நடித்த தொடரின் இயக்குனர் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்ட அன்று இரவு படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்த பிறகு செல்போனில் நீண்டநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சித்ரா யாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்? அவர் இறப்பதற்கு முன் அந்த இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன? தாய் மற்றும் கணவன் மூலம் சித்ராவுக்கு மனஅழுத்தம் கொடுக்கப்பட்டது ஏன் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் சித்ரா இறந்தபிறகு அவரது உடலை மீட்கவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே சித்ராவின் மரணம் தொடர்பாக நாளை ஆர்டிஓ விசாரணை தொடங்கப்பட உள்ளது. மேலும் திருமணம் முடிந்து சில மாதங்களிலையே இறந்ததால் அவருக்கு வரதட்சணை தொல்லை ஏதும் கொடுக்கப்பட்டதா எனவும் ஆர்டிஓ விசாரணை செய்ய உள்ளார்.