சினிமா

தினமும் அவர் மகனிடம் விசாரிப்பேன்! ரொம்ப வேதனையாக இருக்கு! எஸ்.பி.பியின் நிலைகுறித்து வருந்தும் பிரபலம்!

Summary:

Editor mohan talk about spb health condition

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் எஸ். பி .பி யின் உடல் நலம் குறித்து பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜெயம் ரவியின் அப்பாவுமான எடிட்டர் மோகன் உருக்கமாக பேசியுள்ளார். 
எஸ்.பி .பாலசுப்ரமணியமும் நானும் நீண்டகால நண்பர்கள்.அவருக்கும் எங்களுக்குமான உறவு 1975 முதல் இன்றுவரை உள்ளது.

என்னுடைய அனைத்து  மொழி மாற்றுப் படங்களுக்கும், எனது நேர்முகப் படங்களுக்கும் அவர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அவரது பாடல்கள் இல்லாத படங்களே இல்லை. என்னுடைய படங்களின் பூஜைகள் அவரது கோதண்டபாணி தியேட்டரில்தான் வைப்பேன். அதில் எனக்கு ஆனந்தம். நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

இன்றும் நான் ஒவ்வொரு நாளும் அவரது மகன் சரணிடம் கேட்டு அவரது நிலையை அறிந்து கொண்டு இருக்கிறேன். என் மனம் மிகவும் வருத்தத்தில் உள்ளது.
எனது நண்பர் எஸ்.பி.பி மீண்டும் நலமாக வந்து எங்களுடன் கைகோர்த்து வேலை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நிச்சயமாக நம்புகிறேன் என எடிட்டர் மோகன் கூறியுள்ளார்.


Advertisement