சினிமா

MLA தலைமையில் அதிமுகவினர் போராட்டம்; திரையரங்கில் சர்க்கார் காட்சிகள் ரத்து!

Summary:

admk protest against sarkar

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.

சர்க்கார் படத்தில் விஜய் பேசும் வசனங்கள் ஆளும் அதிமுக கட்சிக்கு எதிராக இருப்பதாகவும், சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சனம் செய்திருப்பதாகவும், வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துள்ளதாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் சண்முகம் சர்க்கார் படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

மேலும் இன்று அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது. கோழைகள் போல இப்போது செயல்படுகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சட்ட அமைச்சர் சண்முகம் சொன்னது போல சர்க்கார் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் இதைப்போன்று பிரச்னைகளை ஏற்படுத்தியது இல்லை. நடிகர் விஜய் தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆராக முடியாது. உங்களை முன்னிலைபடுத்தி கொள்ளுங்கள். அதற்காக யாரையும் புண்படுத்த கூடாது" என்று நடிகர் விஜயை கடுமையாக கண்டித்து பேசினார். 

இந்நிலையில், மதுரை, கே.கே.நகரில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் முன்பாக அதிமுக., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். உடனடியாக இப்படத்தை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் இந்தபோராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும், சர்கார் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர். அதிமுக.,வினரின் எதிர்ப்பால் அந்த தியேட்டரில் நண்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக 4.30 மணிக்கு மேல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மதுரையை தொடர்ந்து கோவையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்டிருக்கும் சர்கார் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிமுக., தொண்டர்கள் சிலர் அங்கு திரண்டு, சர்கார் படத்திற்கு எதிராக கோஷமிட்டதுடன், படத்தை தடை செய்ய வேண்டும் என கூறி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனர்களை கிழித்து எறிந்துள்ளனர்.

மதுரை, கோவையை தொடர்ந்து சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னையில் காசி தியேட்டர் முன்பு ஏராளமான அதிமுக., தொண்டர்கள் கூடி சர்கார் படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட போஸ்டர், பேனர்களை அடித்தும், கிழித்தும் துவம்சம் செய்துள்ளனர். சில பேனர்களை சம்பந்தப்பட்டவர்களே நீக்கிவிட்டதாக தெரிகிறது. 


 


Advertisement