#HBDVijayakanth: நிகரற்ற தலைவர், குழந்தையுள்ளம் கொண்ட பேரன்பின் நாயகன் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்..!

#HBDVijayakanth: நிகரற்ற தலைவர், குழந்தையுள்ளம் கொண்ட பேரன்பின் நாயகன் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்..!


actor-vijayakanth-birthda

திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார். அதனைத் தொடர்ந்து, இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தது. மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீது மோகம் கொண்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், தந்தையின் கண்காணிப்பில் இயங்கி வந்த அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளை செய்து வந்தார். 

vijayakanth

பின்பு சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கியுள்ளார். கடந்த 1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்த விஜயகாந்துக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சினிமா வாழ்க்கையில் இருந்த விஜயகாந்துக்கு அரசியலிலும் வரவேற்பு இருந்தமையால், 1993-ல் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டு பலரும் வெற்றி அடைந்தனர். இதனால் விஜயகாந்துக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தாலும், அவ்வப்போது அதனை தெரிவித்தும் வந்தார். ஆனால் முழு நேர அரசியல் களமிறங்கவில்லை.

vijayakanth

கடந்த 2005 ஆம் ஆண்டு தேசியம் முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, அதன் நிறுவனத் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றார். 2006-ல் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2011-ல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். அப்போது, இவரது தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், அதிமுக ஆளும் கட்சியாகவும் தேமுதிக எதிர் கட்சியாகவும் உருவெடுத்தது. 2016 ஆம் தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 

vijayakanth

அவரது கூட்டணியும் படுதோல்வி அடைந்தது.‌ விஜயராஜ் என்ற இயற்பெயரை கொண்ட விஜயகாந்தின் பெயரை இயக்குனர் காஜா தான் விஜயகாந்த் என்று மாற்றினார். சிறு வயது வாழ்க்கைக்கு பின்னர் திரைப்படத்தின் மீதுள்ள மோகத்தால் சென்னைக்கு வந்தவர், 1978 ஆம் ஆண்டிலிருந்து படத்தில் நடித்த தொடங்கி உள்ளார். தற்போது வரை இவர் 156 படங்களில் நடித்துள்ள நிலையில், இவரின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தந்தது. இதன் பின்னரே அவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் அழைக்கப்பட்டார். 

vijayakanth

தனது வாழ்க்கையில் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும், பண்புள்ள மனிதராகவும், பிறரை வளர்த்து விடும் அன்புள்ள குணம் கொண்ட நபராகவும் விளங்கிய விஜயகாந்துக்கு 2011-ல் மதிப்புறு முனைவர் பட்டம், 2001-ல் கலைமாமணி விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவரை புரட்சி கலைஞர் என்றும், கேப்டன் என்றும் அன்புடன் அழைப்பார்கள். திரைத்துறையில் நடிப்பிலும் குணத்திலும் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவர் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. சக மனிதரால் எந்த ஒரு குறையும் கூற இயலாத ஒரு தன்னிகரற்ற தெய்வம் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் அவருக்கு 70 வயது தொடங்குகிறது. நாமும் அந்த நல்ல உள்ளத்தை வாழ்த்தலாமே..