96 : பட விமர்சனம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காதல் காவியம் !!!

96 : பட விமர்சனம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காதல் காவியம் !!!


96-movie-review-lovely

96 என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் காதல் திரைப்படம் ஆகும்.எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது காதல். அந்த காதலை ஒரு முழு படமாக எடுத்து நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இயக்குனராக முதல் படம் போல தெரியவில்லை.

விஜய் சேதுபதி (ராம்) ஒரு டிராவல் போட்டோகிராபர். அழகாக செல்லும் அவர் வாழ்க்கையில், ஒருநாள் எதிர்பாராதவிதமாக தான் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கு செல்கிறார். பள்ளிகால நண்பர்களுடன் பேசுகிறார். மீண்டும் சந்திக்க திட்டம் போடுகின்றனர். 96 ரீயூனியன் இணைகிறது. அங்கே விஜய் சேதுபதி பள்ளிகாலத்தில் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த திரிஷாவும் (ஜானு) வருகிறார்.

அந்த ஒரு நாள் இரவு விஜய் சேதுபதி - திரிஷா வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இருவரும் தங்களது காதலை எவ்வாறு நினைவுகூர்ந்தார்கள்? என ஒட்டுமொத்த படமும் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பது தான் படத்தின் கதை.

விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூட விஜய்சேதுபதியாக தெரியவில்லை. கூச்சம், வெட்கம், நளினம் ஆங்காங்கே தனது பாணி நக்கல் வசனங்கள் என்று படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார். போலீசாகவும், தாதாவாகவும் பார்த்த விஜய்சேதுபதியா இது? என தோன்ற வைக்கிறது.

திரிஷா அறிமுகமான முதல் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறார். தன்னை பார்க்க வந்த ராமை தவறவிட்டதை நினைத்து, அவர் அழும் அந்த ஒரு காட்சி போதும். தமிழ் சினிமாவில் காதலிக்கவும், காதலிக்க வைக்கவும் திரிஷாவுக்கு நிகர் அவரே.

தற்போதைய ராம், ஜானுவுக்கு போட்டியாக நடித்திருக்கிறார்கள், ஆதித்யா பாஸ்கரும், கவுரி கி‌ஷனும். சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பவரும் சரியான தேர்வு தான்.

நாத்தனாரே என்று திரிஷாவை கிண்டலடிக்கும் போதும், விஜய் சேதுபதியும், திரிஷாவும் எல்லை மீறிவிடுவார்களோ என்று பயப்படும்போதும் தேவதர்ஷினி பின்னி எடுக்கிறார். பகவதி பெருமாள், ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் ரசிக்க வைக்கிறார்கள்.

விஜய்சேதுபதி போட்டோ எடுக்கும் அழகான காட்சியமைப்புடன் படம் தொடங்குகிறது. அவர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழையும்போது நாமும் நமது பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழைகிறோம். நீண்டகாலம் கழித்து கை பிடித்து இளவயது நினைவுகளுக்கு கூட்டி சென்றிருக்கும் பிரேமுக்கு நன்றிகள்.

ஒரு சின்ன தவறுதலில் காதல் மீண்டும் கைகூடாமல் போவதும், தன்னை வெறுத்த காதலியின் பின்னாலேயே அவருக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டு தொடர்வதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய தருணங்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்க்கையுடன் இணைக்கிறது. அதுதான் படத்தின் வெற்றி.

படம் முடியும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். அந்த கைதட்டலில் ஒவ்வொருவரின் கைகூடாத பள்ளிப்பருவ காதல் ஒளிந்திருக்கிறது.

படத்தில் காதலை கூட்டுவது மகேந்திரன், சண்முகசுந்தரம் இருவரின் ஒளிப்பதிவுதான். ஒலிப்பதிவும் அதற்கு துணை நிற்கிறது. கோவிந்தின் இசை காதலை இசையால் சொல்கிறது. இசையால் காதலை கண்முன் நிறுத்தியிருக்கிறார். கோவிந்தராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காதல் காவியம்