இந்தியாவை உளவு பார்த்த சீன பலூன்... அமெரிக்கா ஊடகங்களில் பரபரப்பு தகவல்...!
அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உட்பட ஐந்து நாடுகளை சீன பலூன் உளவு பார்த்ததாக அமெரிக்க ஊடகங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மவுண்டானா மாகாணத்தில் இருக்கும் அணு ஆயுத ஏவுதளத்தின் மேல் சீன உளவு பலூன் ஒன்று பறந்தது. அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. சுட்டு வீழ்த்திய சீன பலூன் அட்லாண்டிக் கடலில் வீழ்ந்தது. பலூனின் பாகங்களை அமெரிக்க கடற்படை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அது உளவு பலூன் இல்லை என்றும், வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட பலூன் வழிமாறி சென்று விட்டதாகவும் சீனா விளக்கமளித்தது. அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
ஆனால், அது உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்பட்டது என்றும், அந்த பலூன் சீன விமானப்படையால் அனுப்பப்பட்டது என்றும், அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா, ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் சீன பலூன் உளவு பார்த்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் கடந்த ஜனவரி மாதம் வங்கக் கடலில் இந்தியாவின் முக்கிய ராணுவ தளவாடங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்களின் மீது வெள்ளை நிற பலூன் பறந்ததாகவும், இது அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனாக இருக்கலாம் எனவும் அந்தமானில் உள்ள உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.