16-வது மாடியில் இருந்து அந்தரந்தில் தொங்கிய 3 வயது குழந்தை..! நூலிழையில் குழந்தை மீட்பு..... திக் திக் வீடியோ!!!



china-firefighters-rescue-toddler-16th-floor

சீனாவின் புஜியான் மாகாணத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 16-வது மாடியில் இருந்து தவறி விழும் அபாயத்தில் சிக்கிய 3 வயது பெண் குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வீட்டின் முன்புற இரும்புக் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை, அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி தவித்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புப் படையினர், குழந்தையை காயமின்றி மீட்டனர்.

தாய் வெளியே சென்றபோது நேர்ந்த ஆபத்து

புஜியான் மாகாணத்தின் ஜாங்பிங் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தாய் வீட்டில் இருந்துள்ளார். காலை உணவுக்குப் பிறகு குழந்தை தூங்கியதால், காய்கறி வாங்குவதற்காகத் தாய் அருகில் உள்ள கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடேய்.. அது புள்ள டா..! குழந்தைக்கு தாய் செய்த கொடுமை... கூடவே இருந்து எட்டி உதைத்த வளர்ப்பு தந்தை! ஷாக் வீடியோ..!!!

சிறிது நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை, வீட்டின் முன்புறம் இருந்த இரும்புக் கிராதிக் கம்பிகளுக்கு இடையே புகுந்து வெளியே செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாகக் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை, 16-வது மாடியில் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கியது. கீழே விழுந்துவிடும் அபாயத்தில் குழந்தை அலறியதால், அக்கம்பக்கத்தினர் பதறியடித்து ஓடி வந்தனர்.

நாற்காலி மூலம் மீட்க முயன்ற அக்கம்பக்கத்தினர்

குழந்தை ஆபத்தான நிலையில் தொங்குவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதுவரை குழந்தையைத் தாங்கிப் பிடிக்கச் சிறிய நாற்காலியைப் பயன்படுத்தியும் முயன்றனர். ஆனால், குழந்தை மிக உயரத்தில் சிக்கியிருந்ததால் அவர்களால் அதை நெருங்கிப் பாதுகாப்பாக மீட்க முடியவில்லை.

இரும்புக் கம்பிகளை அறுத்து பத்திரமாக மீட்ட வீரர்கள்

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பூட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். பின்னர் பால்கனிப் பகுதிக்குச் சென்று, பாதுகாப்புக் கருவிகளின் உதவியுடன் குழந்தை சிக்கியிருந்த இரும்புக் கம்பிகளை அறுத்தனர். இதையடுத்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். குழந்தைக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

16-வது மாடியில் இருந்து கீழே விழும் அபாயத்தில் இருந்த குழந்தை நூலிழையில் காப்பாற்றப்பட்ட மீட்புக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

 

இதையும் படிங்க: அதிர்ச்சி! பூங்காவில் ஷாஹெட் ட்ரோன் நடத்திய கொடூர வேட்டை.. அப்பாவி குழந்தைகள் இறக்கும் கொடுமை! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!