குடியால் கெட்ட குடி: இளைஞர் செய்த காரியத்தால் பறிபோன உயிர்..!youth commits suicide by drink poison at bavanisagar

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில்லுள்ள கணபதி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (31). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்சவேணி (25). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில், லோகநாதனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. குடி பழக்கத்தை நிறுத்துமாறு அம்சவேணி கூறியுள்ளார். லோகநாதனின் குடிபழக்கத்தால் தம்பதியினர் இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அம்சவேணி கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை பிரிந்த லோகநாதன்  வேதனையில் இருந்து வந்துள்ளார்.

மேலும், மனைவியை தன்னுடன் வரும்படி அழைத்து வந்துள்ளார். அதனை அம்சவேணி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த லோகநாதன், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தபோதும்,  சிகிச்சை பலனின்றி  லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பவானிசாகர் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.