பணத்துக்காக 3 வது திருமணம் செய்து மோசடி: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவலால் அதிர்சியடைந்த போலீசார்..!

பணத்துக்காக 3 வது திருமணம் செய்து மோசடி: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவலால் அதிர்சியடைந்த போலீசார்..!


Woman arrested for cheating Chennai IT company employee by marrying her for the third time

சென்னை ஐ.டி நிறுவன ஊழியரை மூன்றாவதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை,  ஆவடியை அடுத்த  புதுப்பேட்டை , ராஜீவ் நகர் 11வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65). இவரது மகன் ஹரி (44). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் சென்னை தரமணியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து 2 வது திருமணம் செய்ய திட்டமிட்ட ஹரி, அதற்காக வரன் தேடி வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டிற்கு தோட்ட வேலை செய்தவர் மூலம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை பார்த்துள்ளனர். அவர் தனக்கு 35 வயது என்று கூறி அறிமுகம் ஆனார். மேலும், தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை எனவும், அதன் காரணமாக தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சரண்யாவுக்கும் ஹரிக்கும் உறவினர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் இருவரும் இல்லற வாழ்வை தொடங்கிய நிலையில், ஹரியின் சொத்து விவரங்கள் குறித்து கேட்டு சரண்யா தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் ஹரியையும் அவரது தாயாரையும் சொத்துக்களை தனது பெயரில் மாற்றி தருமாறு மிரட்டியுள்ளார். இதற்கு அவர்கள் உடன்படாததால், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக திருப்பதி காவல் நிலையத்தில் ஹரி மற்றும் அவரது தாயார் மீது சரண்யா புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஹரியின் தாயார் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண்யாவின் மீது அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சரண்யாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவரது உண்மையான பெயர் சுகுணா என்பதும் போலியாக சரண்யா என்று கூறியிருப்பதும் தெரியவந்தது. மேலும்  50 வயதான சுகுணாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் நடந்துள்ளதும், அவருக்கு 2 பெண் பிள்ளைகள் இருப்பதும், பணத்திற்காக ஹரியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுகுணாவை காவல்துறையினர் கைது செய்தனர்.