குடி போதையில் வீடு புகுந்து கொள்ளையடித்த கணவன்: மனைவி செய்த காரியத்தால் குவியும் பாராட்டு..!

குடி போதையில் வீடு புகுந்து கொள்ளையடித்த கணவன்: மனைவி செய்த காரியத்தால் குவியும் பாராட்டு..!


wife apologized for hand over 22 pounds of jewelry stolen by her husband

கணவர் திருடிய 22 பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்ட மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகேயுள்ள கோட்டக்குப்பம் அமிர்தா கார்டன் பகுதியை சேர்ந்த லியாகத் அலி, இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருடைய, மனைவி நசீமா (53) என்பவர் தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு நசீமா தனது தாயுடன் வெளியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் நகை, ரூ.8000 பணத்தை திருடி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, திருட்டு சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் நசீமா புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், நசீமா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நசீமா வீட்டில் திருடியது, சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சுனன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் துரிதப்படுத்தினர்

இதற்கிடையே அர்ச்சுனன் தான் திருடிய நகை மற்றும் பணத்தை தனது மனைவி அன்பரசியிடம் கொடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசி, இவ்வளவு நகையும், பணமும் எப்படி கிடைத்தது என கணவரிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவர் நசீமா வீட்டில் திருடியதாக தெரிவித்துள்ளார்.

இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த அன்பரசி, கணவர் கொடுத்த 22 பவுன் நகை, ரூ.8000 பணத்தை நசீமாவின் வீட்டிற்கே சென்று ஒப்படைத்துள்ளார். மேலும் தனது கணவர் குடி போதையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி கதறி அழுதுள்ளார்.

கணவர் திருடிய நகையையும் பணத்தையும் அவரது மனைவி உரியவரிடம் சென்று ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.