கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க; மீனவர்கள் எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு...!
கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க; மீனவர்கள் எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு...!

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
முன்னாள் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு. கருணாநிதிக்கு ரூ.81 கோடி செலவில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழகத்தை ஆளும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் இருக்கும் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திலும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திலும் என 650 மீட்டர் பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கு தமிழக கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கடலில் இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதால் கடல் மாசுபாடுக்கு வழிவகுக்கும் என்று ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளனர்.
ஆனால், திமுகவினர் கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் அமைத்தே தீரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக மீனவர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேனா சின்னம் அமைப்பதால் கடல் வளங்கள் பாதிக்கப்படும், மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகும் என்று குறிப்பிட்டு பேனா சின்னம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது, என்று மீனவர்களின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பற்றி பூவுலகின் நண்பர்கள் சூற்றுச்சூழல் அமைப்பு கூறியபோது, இந்த பேனா சின்னத்தை கடலில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்கலாம் என்று கூறியுளது.
மு.கருணாநிதியின் நினைவிடத்தில் அல்லது அவர் உருவாக்கிய தலைமை செயலகத்தில் அல்லது மதுரையில் அமைக்கப்படும் கலைஞர் நூலகத்தில், பேனா நினைவுச் சன்னம் அமைக்கலாம் என்றும் அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கெனவே இவ்வாறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பு நிலவிவரும் நிலையில் தமிழக மீனவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் பேனா நினைவுச் சின்னத்துக்கான எதிர்ப்பு வலுத்துள்ளது.