தமிழகம்

காதல் திருமணம்.. வெட்டியாக சுற்றி மகளை கொடுமைப்படுத்திய மருமகன்.. பாசத்தால் கூலிப்படை ஏவி கதை முடித்த மாமியார்.!

Summary:

காதல் திருமணம்.. வெட்டியாக சுற்றி மகளை கொடுமைப்படுத்திய மருமகன்.. பாசத்தால் கூலிப்படை ஏவி கதை முடித்த மாமியார்.!

காதல் திருமணம் செய்து மகளை கொடுமைப்படுத்திய மருமகனை மாமியார் கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், பெருநாழி விலக்கு பகுதியை சார்ந்தவர் அரவிந்த் (வயது 30). இவரது மனைவி மாலா (வயது 25). இவர்கள் இருவருக்கும் 2 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. அரவிந்த் கடந்த 3 ஆம் தேதி தென்காசி சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதுகுறித்து மாலா தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் ஆய்வாளர் பாலமுருகன் நடத்திய விசாரணையில் அரவிந்த் கொலையானது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில், கீழப்புலியூரை சார்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பொன்னரசு (வயது 20) கைது செய்யப்பட்டார். அரவிந்த் கொலை செய்யப்பட்டு, உடலை பட்டாகுறிச்சியில் உள்ள கல்குவாரியில் வீசியதும் அம்பலமாமனது.

பொன்னரசுவின் வாக்குமூலத்தின் பேரில், கீழப்புலியூரை சார்ந்த தம்புரான் என்பவரும் கைது செய்யப்பட்டார். தம்புரானிடம் நடந்த விசாரணையில், மாலாவின் தாயார் பொன்ராணி மருமகன் அரவிந்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் அம்பலமானது. விசாரணையில், பல பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளன. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்புலியூர் பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 20 வருடத்திற்கு முன்னதாக பணிக்காக தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளத்திற்கு இடம்பெயர்ந்த நிலையில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகளே மாலா. அரவிந்திற்கும் - மாலாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அரவிந்த் திருமணம் முடிந்த நாட்களில் இருந்தே வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், காதல் மனைவி மாலாவையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

இந்த தகவல் மாலாவின் தாயார் பொன்ராணிக்கு தெரியவரவே, கணவர் அரவிந்தை விவாகரத்து செய்து தன்னுடன் வரக்கூறி மாலாவுக்கு தாய் கூறியுள்ளார். மேலும், மாமியார் - மருமகன் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. மகள் காதல் திருமணம் செய்து கஷ்டப்படுவதை தாங்க இயலாத தாய் பொன்ராணி, அரவிந்தை கொலை செய்யும் முடிவெடுத்துள்ளார்.

இதற்கு சொந்த ஊரான கீழப்புலியூர் பகுதியை சார்ந்த உறவினர் வசந்த் (வயது 25) என்பவரிடம் உதவி கேட்கவே, அவரும் உதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் கீழப்புலியூரை சார்ந்த பொன்னரசை நேரில் சந்தித்து பேசி, பொன்னரசுவின் கூட்டாளிகள் சீதாராமன், மணிகண்டன், தம்புரான் ஆகியோருடன் சேர்ந்து அரவிந்தை கொலை செய்ய ரூ.4 இலட்சம் பணம் கொடுக்க முடிவு செய்து, முதற்கட்டமாக ரூ.2 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி தென்காசியில் கார் ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் எடுப்பதாக அரவிந்தனுக்கு போன் மூலமாக சீதாராமன் தகவல் தெரிவிக்க, சீதாராமன் கீழ்ப்புலியூரை சார்ந்தவர் என்பதால் அரவிந்த் அவரை நம்பி வந்துள்ளார். தென்காசியில் தனியார் விடுதியில் அரவிந்த் மற்றும் சீதாராமன் அறையெடுத்து தங்கி இருந்த நிலையில், 4 ஆம் தேதி காலை காரில் சீதாராமன் தனது கூட்டாளிகளை அழைத்து வந்துள்ளார். 

முதலில் நண்பர்கள் என அறிமுகப்படுத்தி, அரவிந்தை காரை எடுக்கச்சொல்லி, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து அரவிந்தை கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை பட்டாகுறிச்சியில் இருக்கும் குவாரியில் கல்லைக்கட்டிவீசி தலைமறைவாகியுள்ளனர். பொன்ராணியை கொலை செய்த காவல் துறையினர், கூலிப்படைக்கு உடந்தையாக இருந்த வசந்தை தேடி வருகின்றனர். 


Advertisement