ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த பணம்.! பெண் செய்த நெகிழ்ச்சி செயல்.! குவியும் பாராட்டுக்கள்.!
தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, சேலையூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7ஆம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே யரோ ஒருவர் ஏடிஎம்-ல் வந்த பணம் ரூ.20 ஆயிரத்தை எடுக்காமல் விட்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து புவனேஸ்வரி உடனடியாக அந்த பணத்தை எடுத்துக் கொண்டு, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து, வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க ரூ.20 ஆயிரத்தை ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆனந்தன் என்ற முதியவர் அந்த ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்க முற்பட்டு பணம் வராததால் சென்றதும், சிறிது நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வந்ததும், அச்சமயம் மேற்படி புவனேஸ்வரி ஏடிஎம் மையத்திற்கு சென்றபோது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருந்ததை கண்டதும் தெரியவந்தது.
இந்தநிலையில், தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பணத்தை பொறுப்புடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன பெண் ஊழியர் புவனேஸ்வரியை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.