சொத்துக்காக தம்பியை கொடூரமாக உருட்டு கட்டையால் அடித்து கொன்ற அண்ணன்...!The brother killed his younger brother by brutally rolling and beating him with a stick for property...

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் சொத்து தகராறில் தம்பியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே  இருக்கும் சோழபுரம் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகன்கள் பொன்மாடசாமி (30), முத்துசாமி (26). சொத்து தகராறில் அண்ணன், தம்பி இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று அதிகாலை முத்துசாமி, பொன்மாடசாமியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி முத்துமாரியிடம் சண்டை போட்டுள்ளார். பினனர் வீட்டில் இருந்த டிவி மற்றும் பல பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதை அறிந்து ஆத்திரமடைந்த பொன்மாடசாமி, தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த முத்துசாமியை உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்தார். இதனால் பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலின் பேரில் அங்கு வந்த எப்போதும்வென்றான் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பொன்மாடசாமியை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.