பீகாரிகள் தாக்கப்பட்டால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது: துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்!.



Tejashwi Yadav condemned if Biharis are attacked

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக பரவிய வந்தியால் வட மாநில தொழிலாளர்கள் இடையே பதற்றம் நிலவியது. அதே நேரத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்ப வட மாநிலத்தவர்கள் முண்டியடித்ததால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இந்த விவகாரம், பீகார் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இதனையடுத்து உண்மை நிலையை கண்டறிய பீகார் அரசு ஒரு குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது. மேலும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 4 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், இந்த விவகாரத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய குழு ஒன்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பீகார் மற்றும் தமிழக அரசுகள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. பீகார் பா.ஜனதா தலைவர் இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜனதா தலைவரை தொடர்புகொண்டு கேட்டபோது அதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறவில்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு 2 மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.