தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளையும் மார்ச் 31-வரை மூட அரசு உத்தரவு!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கொரோனா பீதி காரணமாக, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் விடுதிகளிலேயே தங்கியிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களையும் வரும் 31 ஆம் தேதி வரை மூடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மார்ச் 31-ம்தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.