மாணவர்கள் நாட்டின் எதிர்காலம், அவர்களின் தற்கொலை கூடாது - டி.ஜி.பி சைலேந்திர பாபு.!

மாணவர்கள் நாட்டின் எதிர்காலம், அவர்களின் தற்கொலை கூடாது - டி.ஜி.பி சைலேந்திர பாபு.!


Tamilnadu DGP Sylendra Babu IPS Advice and Request to Student Donot Suicide

சமீபத்தில் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வரும் நிலையில், அதனை செய்ய கூடாது என தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "பள்ளிக்கூடங்கள் திறந்து வகுப்புகள் நடக்கின்றன. சில மாதங்களில் இறுதி தேர்வு நடக்கவுள்ளது. இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்து, படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய நேரம். இந்த சூழலில், மாணவர்கள் சில காரணத்திற்காக தற்கொலை, தற்கொலை முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன. 

இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்க கூடாது. எனவே மாணவர்கள் மோசமான முடிவை கைவிட வேண்டும். 16, 18 வயதுள்ள மாணவர்கள் 70 வயதை கடந்தும் வாழ வேண்டும். உங்களுக்கு சிறிய வயது தான் ஆகிறது. மதிப்பெண், பிற விஷயம் கிடைக்கவில்லை என்று கருதி மாணவர்கள் விபரீத முடிவு எடுக்க கூடாது. நமது உயிரை நாமே இழப்பது மிக கொடூரமான, தவறான முடிவு.

நீங்கள் இந்த நாட்டின் எதிர்கால சொத்து. சமுதாயத்திற்கு எதிரான குற்றத்தை நாம் செய்ய கூடாது. இன்று ஏற்பட்டுள்ள சிறிய பின்னடைவால் தற்கொலை செய்துகொண்டால், நாளை நீங்கள் எப்படி முதல்வர், ஆசிரியர், அரசு அதிகாரி, மருத்துவர் என பல்வேறு பதவிகளுக்கு எப்படி வர இயலும்?. பெற்றோர்கள் உங்களை நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் உயிரிழந்தால் அவர்கள் எப்படி அதை தாங்குவார்கள். 

அதுபோன்ற விபரீத முடிவுகள் எடுக்க கூடாது. ஒருவேளை தற்கொலை முடிவு இருந்தால் காவல் துறை மனநல ஆலோசனை தொலைத்தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். மேற்படி உதவி எண்களான 1098, 91529 87821 அல்லது icallhelpline.org என்ற இணையத்தின் வழியே நீங்கள் ஆலோசனை பெறலாம். மாணவர்களே உற்சாகப்படுங்கள், விரும்பி பாடங்களை படியுங்கள், படிப்பே சுகமாக இருக்கும். Wish you all the best"என்று தெரிவித்தார்.