ரஜினி, கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா? அவர்கள் அரசியலில் தொடர்ந்தால் அவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழக முதல்வர்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ரஜினியைப் போன்றே கமலும் அதிமுக, திமுகவைப் பற்றி விமர்சனம் செய்துள்ளாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர், இவ்வளவு பேசும் அவர் ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிடவில்லை. அவர் மிகப்பெரிய தலைவர் தானே? பாராளுமன்றத் தேர்தலில் எவ்வளவு வாக்குகளை வாங்கினார் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர், கமலுக்கு வயதாகிவிட்டது, இதனால் திரைப்படத்துறையில் போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கமல் போன்றவர்கள் கட்சி ஆரம்பிக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை கூறுவது தவறாக உள்ளது என கூறினார்.
நாங்கள் எல்லாம் எடுத்தவுடன் இந்த நிலைக்கு வரவில்லை. சுமார் 45 ஆண்டு காலம் கட்சியில் பணியாற்றி இருக்கின்றோம். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, பல்வேறு பணிகளை மக்களுக்குச் செய்து தற்போது மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளோம்.
ரஜினி, கமல் மக்களுக்கு என்ன பணி செய்தார்கள்? திரைப்படங்களில் நடித்தார்கள், வருமானம் பெற்றார்கள். ஆனால் இன்று வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் . ஆனால் மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்.
இவர்களைவிட, மிகப்பெரிய நடிகர், மரியாதைக்குரிய சிவாஜிகணேசன் தேர்தலை சந்தித்து அவருக்கு என்ன நிலை ஏற்பட்டதென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவரை விடவும் மிகச்சிறந்த நடிகர் இல்லை. புரட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் நடிகர் திலகம் இருந்தார். ஆனால் அவரெல்லாம் கட்சி தொடங்கி ஏற்பட்ட நிலைமை தான் இவருக்கும் ஏற்படும் என தெரிவித்தார்.