Nainar Nagendran: பொங்கலுக்கு பின் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி.!



Tamil Nadu Politics Nainar Nagendran Says Major Alliance Announcement After Pongal 2026

2026 அரசியல் பரபரப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், பொங்கல் 2026 பண்டிகைக்குப்பின் கூட்டணி நிலை தொடர்பாக உறுதியான தகவல்கள் வெளியாகும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், வடகரை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் அமையவுள்ள பாலத்துக்கு அடிக்கல் நாட்டிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்து 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இளைஞர்களின் நிலை:

இதுகுறித்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. போதைப்பொருள் கிராமங்கள் வரை கிடைக்கிறது. புத்தகம் ஏந்தி பள்ளிகளுக்கு செல்லும் வயதுடைய மாணவர்கள், அரிவாள் தூக்கி வருகின்றனர். இந்த விஷயங்களை மத்திய அமைச்சர் அறிந்துகொள்ளும் வகையில் அமித் ஷாவுக்கு கடிதமும் எழுதியுள்ளேன். அதில் தமிழகத்தின் நிலை குறித்து குறிப்பிட்டுள்ளேன்.

ஆட்சி மாற்றம் உறுதி:

மக்களின் மனதில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தினை திமுகவினர் ஏற்படுத்திவிட்டனர். அதனால் 2026 தேர்தலுக்குப்பின் ஆட்சிமாற்றம் உறுதியாக ஏற்படும். தேர்தலுக்கு 90 நாட்கள் உள்ளன. பொங்கலுக்கு பின் உறுதியான கூட்டணி நிலை அறிவிக்கப்படும். ஜனவரி 04ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வருகை தருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 'தமிழகம் தலைநிமிர தமிழன்' நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தற்போது பிரதமர் தமிழ்நாடு வரும் திட்டம் இல்லை. 

தீபாவளி வாழ்த்து சர்ச்சை:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ. பன்னீர் செல்வம் இணைய வேண்டும். அவர்கள் இணைவார்கள் என்ற தகவல் வந்தாலும், அது எனக்கு தெரியாது. அதிமுகவில் நடக்கும் விவகாரம் அது. அவர்கள் இணைய வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம். பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து அறிவிப்பு இல்லை. தமிழ்நாடு அரசு நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. தமிழகத்தில் நிதி நிர்வாகம், நீதி நிர்வாகம் சரியில்லை. தீபாவளிக்கு வாழ்த்து செல்லாதவர்கள், பொங்கலுக்கு வாழ்த்து சொல்லி தமிழர் திருநாள் என தப்பிப்பார்கள். தீபாவளிக்கு வாழ்த்து வராமல் கிறிஸ்துமஸ்-க்கு மட்டும் வாழ்த்து சொல்வது போலி மதசார்பின்மை ஆகும்" என பேசினார்.