போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது: ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளியை முற்றுகையிட்ட மாணவ-மாணவியர்..!

போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது: ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளியை முற்றுகையிட்ட மாணவ-மாணவியர்..!


students-besieged-school-in-support-of-teacher-arrested

கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள குண்ணாகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதை (59). இவர் தோகைமலை அருகேயுள்ள பொம்மாநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாக திட்டி, தவறான நோக்கத்துடன் அவர்களை தொட்டதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி லாரா ஜேசுராஜ், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஆபாசமாக திட்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மருதை மீது வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் அவரை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியரை பொய் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, டி.எஸ்.பி ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட எஸ். பி. சுந்தரவதனம் ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ். பி. பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் 3 மணி நேரம் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.