ஓட்டையை போட்டு சரக்கு பாட்டில்களை ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்: 25 ஆயிரம் ரூபாய் அம்பேல்..!

ஓட்டையை போட்டு சரக்கு பாட்டில்களை ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்: 25 ஆயிரம் ரூபாய் அம்பேல்..!



stole liquor bottles by punching a hole in the wall of the Tasmac shop near Kalasapakkam.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்களை மர்ம நபா்கள் திருடிச் சென்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடிலிருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வடபுழுதிவுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலை,வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் டாஸ்மாக் கடையின் கட்டிட உரிமையாளர் சுந்தர் கடையின் சுவரில் துளை போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர், டாஸ்மார்க் கடை மேனேஜர் அண்ணாமலைக்கு போன் செய்து தகவல் அளித்தார். இதைதொடர்ந்து அவர் கலசபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், மர்ம நபர்கள் கடையின் சுவரில் துளைபோட்டு, உள்ளே புகுந்து 100-க்கும் அதிகமான மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதில் திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மது பாட்டில்களை திருடி சென்றவர்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.