தமிழகம்

வாடகை வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்த கள்ளக்காதலர்கள் திடீர் தற்கொலை: குழம்பும் காவல்துறை..!

Summary:

வாடகை வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்த கள்ளக்காதலர்கள் திடீர் தற்கொலை: குழம்பும் காவல்துறை..!

சின்னசேலத்தில் கணவன், மனைவி என்று கூறி வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த கொசப்பாடியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் ரமேஷ்  (42) தனியார் பேருந்து ஒன்றில்  ஓட்டுனராக பணிபுரிந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும்  2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி ரஞ்சிதா  (28). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களில் ரமேஷ் தனது மனைவியை பிரிந்தும், ரஞ்சிதா தனது கணவரை பிரிந்தும் வாழ்ந்து வந்துள்ளனர். ரமேஷ் மற்றும் ரஞ்சிதா இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இவர்களிடையே உறவு நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சின்ன சேலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று மாலை 4 மணியளவில் கொசப்பாடி கிராமத்தில் உள்ள தனது உறவினரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட ரமேஷ், அவரும், ரஞ்சிதாவும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதன் காரணமாக  சந்தேகமடைந்த ரமேஷின் உறவினர்கள் இரவு 8 மணியளவில் சின்னசேலத்தில் ரமேஷ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்தனர். அங்கு ரமேஷ் விஷம் குடித்தும், ரஞ்சிதா துாக்குப் போட்டும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரது  உடலையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இருவரும் உண்மையிலேயே தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement