சுற்றுலாவுக்கு சென்ற போது விபரீதம்: காவிரியாற்றங் கரையில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி..!Shocked by the incident on the banks of Cauvery

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள கடம்பன் துறை காவிரி ஆற்று பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதை ஒட்டி பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் தடுக்கும் பொருட்டு வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி நேற்று இரவு குளித்தலை கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரான ரத்தினம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுற்றுலாவுக்கு வந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். இதனை பார்த்த ரத்தினம் தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் உள்ளே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனை  கேட்காத சுப்பிரமணி மற்றும் அவரது மகன் கோபால கிருஷ்ணன் ஆகிய இருவரும் அவரைத் தாக்கியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் காயம் அடைந்த ரத்தினம் குளித்தலை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் குளித்தலை காவல்துறையினரிடம் அறிவுறுத்தினார்.