பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் அதிரடி மாற்றங்கள்! விழிபிதுங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

பள்ளிக்கல்வித்துறையில் தொடரும் அதிரடி மாற்றங்கள்! விழிபிதுங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்



school-educational-department-action-on-teachers

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

school teachers

மேலும் இதுவரை வெறும் நோட்டுகளில் மட்டுமே குறிக்கப்பட்டு வந்த ஆசிரியர்கள் வருகை பதிவேடு, இனி பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதற்கான டெண்டரும் விட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

பள்ளிக்கல்வித்துறையில் எடுக்கப்படும் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளால், இதுவரை சொகுசாக இருந்து வந்த சில அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஆளாகிவருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக இவர்களும் வேலை செய்யவேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் சிரமப்பட்டாலும், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்பாடு அடைந்து மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் உள்ளனர்.

school teachers

இந்நிலையில், அடுத்த அதிரடியா அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முன் அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், அல்லது கல்வி அலுவலர்களிடம் முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து வருகின்றனர். இன்னும் சில ஆசிரியர்கள் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு, அதை கணக்கில் காட்டாமல், பள்ளிக்கு வந்ததாக கையெழுத்து போடும் நிலையும் உள்ளது. சில ஆசிரியர்கள் நீண்ட விடுப்பிலும் சென்றுவிடுகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில்லை. இதனால் தேர்வு நேரங்களில் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விடுகிறது.

school teachers

இது போன்ற முறைகேடுகளை தடுக்க தற்போது பள்ளிக்கல்வி துறை அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, விடுப்பு எடுக்க விரும்பும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முன் அனுமதி பெற வேண்டும். கட்டாயமாக விடுப்பு விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், அல்லது பணியாளர்கள் மரணமடைந்தால் அவர்களுக்கு குடும்ப ஓய்வு ஊதியம் வழங்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.