அரசியல் தமிழகம் சினிமா

சர்க்கார் இன்றுவரை: வரலாற்றில் இடம்பிடித்த போராட்டமும் வெற்றியும் கலந்த ஒரு காவியத்தின் கதை!

Summary:

sarkar histroy af of now

சர்க்கார்: இன்றைய நிகழ்கால அரசியல் அவலங்களை மக்களுக்கு பகிரங்கமாக எடுத்துக்கூறும் ஒரு புரட்சி திரைப்படம், இல்லை வரலாறு படைத்த காவியம் என்றே சொல்லலாம். இத்தகைய எழுச்சிமிக்க படங்களில் விஜய் ஒருவரால் மட்டுமே துணிச்சலாக நடிக்க முடியும் என்று விஜய் ரசிகர்கள் மார்தட்டி கொண்டாடி வருகின்றனர். 

சர்க்காருக்கு முன்னால் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படம் மத்திய அரசின் பல்வேறு குறைகளை எடுத்துக் கூறியதால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி பல பிரச்சனைகளை சந்தித்தது. அப்படியிருந்தும் மீண்டும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களையும் குற்றங்களையும் எடுத்துரைக்கும் புரட்சிகரமான சர்க்கார் படத்தில் மீண்டும் விஜய் நடித்துள்ளது உண்மையாகவே அவருடைய துணிச்சலை காட்டுகிறது.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர் வெளியான நாள் முதலே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. முழுக்க முழுக்க அரசியல் பின்புலம் கொண்டு எடுக்கப்பட்டதால் பல அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தங்கள் 
கொடுக்கப்பட்டன.

முதல் போஸ்டர்:

தொடர்புடைய படம்
படத்தின் முதல் போஸ்டர் வெளியான போதே நடிகர் விஜய் புகை பிடிப்பது போல் அமைக்கப்பட்ட புகைப்படத்தால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் இப்படி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைவது நல்லதா என கேள்விகள் எழுந்தன.

கதை திருட்டு:

murugadass க்கான பட முடிவு
டீசர் வெளியான நாள் முதலே படத்தின் கதை யாருடையது என்ற சர்ச்சை எழ ஆரம்பித்தது. செங்கோல் என்னும் தன்னுடைய கதை தான் சர்க்கார் என  துணை  இயக்குனர் வருண் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல்வேறு ஒப்பீடுகளுக்கு பிறகு இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ் சர்க்கார் கதை உண்மையில் துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் உடையது தான் என்பதை உறுதி செய்தார். இதனால் படம் தீபாவளியன்று வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகம் எழ ஆரம்பித்தது. இதன்பிறகு வருண் ராஜேந்திரன் உடன் சமரசம் ஏற்பட்டு படம் ஒருவழியாக நிர்ணயம் செய்யப்பட்ட தீபாவளி நாளான நவம்பர் 6 ஆம் தேதியே உலகம் முழுவதும் வெளியானது.

கதைச்சுருக்கம்:
படத்தின் கதாநாயகன் சுந்தர ராமசாமி உலகத்தின் பெரும் பணக்காரர். தமிழகத்தில் புரையோடியிருக்கும் ஊழலை தேர்தல் அரசியல் சீர்திருத்த கண்ணோட்டத்துடன் அணுகி வெற்றி பெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கதை அளவில் மிக நன்றாகவே யோசிக்கபட்டிருக்கிறது. ஆனால் இது ஒரு முழு நீள அரசியல் திரைப்படமா அல்லது இன்றைய அரசியல்வாதிகளின் பகடியா அல்லது இது ஒரு வணிக சினிமாவா அல்லது இது விஜய்யின் அரசியல் வாழ்வின் அச்சாரமா என பல கேள்விகளை எழுப்பியுள்ளது விஜயின் இந்த சர்க்கார்.

கதையில் அன்றிலிருந்து இன்று வரை உள்ள ஏராளமான அரசியல்வாதிகளை தாக்கியிருக்கின்றனர். முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இன் உடல்மொழியும் அவர் கூறும் வசனங்களும் ஒரு மறைந்த மூத்த அரசியல்வாதி நினைவுபடுத்துவது தவிர்க்க முடியவில்லை. அவருக்கு பக்க பலமாக செயல்படும் "இரண்டு" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரின் வாய்க்கோனல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. கோமளவல்லி என்னும் கதாபாத்திரத்தைப்பற்றி அனைத்து பத்திரிகைகளும் அலசுகின்றன. மேலும் இந்த படத்தில் அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், டிவி முதலிய பொருட்களை மக்கள் தீயிலிட்டு கொளுத்தும் காட்சி அரசின் திட்டங்களை கேலி செய்வது போல் அமைந்திருப்பதும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்:


தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் அரசியலில் படம் பதிவின் மூலம் தடம் பதித்தது போல நடிகர் விஜய்யும் ஒருநாள் அரசியலுக்கு வருவார் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் இப்படி ஒரு சூழ்நிலையில் முழுக்க முழுக்க அரசியல் சாயம் பூசப்பட்ட இந்தப் படம் வெளியாகிறது வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது அவர்கள் படம் வெளியாகும் அந்த நாளை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஜய்யின் சர்க்கார் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியது. கொல்லம் நண்பர்கள் என்ற விஜய் ரசிகர் மன்றம் சார்பாக விஜய்க்கு 175 அடி உயரத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய வானுயர கட்டவுட் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் இயற்கை சீற்றத்தால் அடுத்த நாளே அந்த கட் அவுட் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் ராக்கர்ஸ்:கதை திருட்டு பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் விஜய் ரசிகர்கள் படம் வெளியாகுமா இல்லையா என்ற ஒருவித அச்சத்தில் இருந்து வந்தனர். ஆனால் இதைப்பற்றி எதையுமே பொருட்படுத்தாத தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் குறிப்பிட்ட தேதியில் சர்க்காரின் HD பிரிண்ட் இணையத்தில் வெளியிடப்படும் என டுவிட்டரில் பதிவிட்டு பீதியை கிளப்பியது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியது. இருப்பினும் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் சர்க்கார் திரைப்படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

வசூல் சாதனை:
இத்தனை தடைகளை தாண்டி நவம்பர் 6 தீபாவளி அன்று வெளியான சர்க்கார் திரைப்படம் முதல் நாள், இரண்டாம் நாள் என வசூல் சாதனை படைத்தது இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பெற்று சாதனை படைத்தது சர்க்கார். 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான சர்க்கார் திரைப்படம் உலகம் முழுவதிலும் சேர்த்து முதல் நாளிலே 70 கோடிக்கும் மேலான வசூல் பெற்று சாதனை படைத்தது. அதோடு மட்டுமல்லாமல் இரண்டாம் நாள் முடிவில் 110 கோடியை தாண்டியது.பிரச்சனைகள் ஆரம்பம்:
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த சர்க்கார், ஆட்சியில் இருக்கும் தலைவர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது. இதற்கு காரணம் இந்த படத்தில் அவர்களுடைய ஆட்சியின் அவலங்களை, இயலாமையையும் எடுத்துக் கூறியதும் கட்சியின் தலைவர்களை கெட்டவர்கள் போல் சித்தரிப்பதும், அரசின் திட்டங்களை கேலி செய்வது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டதுதான்.

வேலூர் மாவட்டத்தில் தனது வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்ட சர்க்கார் பேனரை கிழித்ததால் இளைஞரை விஜய் ரசிகர்கள் தாக்கினர். இதனால் மனமுடையந்த அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

அமைச்சர்கள் போர்க்கொடி:
சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு முதல் முதலாக எச்சரிக்கை விடுத்தார்.

அவரை தொடர்ந்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறினார். அரசாங்கத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சினிமா என்ற போர்வையில் அரசு திட்டங்களை விமர்சனம் செய்து, மக்களை வன்முறைக்கு தூண்டிவிடும் வகையில், ஒரு தீவிரவாதியைப் போன்று ஒரு செயலை நடிகர் விஜய் செய்திருக்கிறார். சர்கார் பட இயக்குநர், நடிகர், படத்தை திரையிட்ட திரையரங்குகள் சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். 

தொடர்புடைய படம்

இவர்களை தொடர்ந்து சர்க்கார் படத்தை பற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது. அம்மா இருந்திருந்தால் இவர்களுக்கு இப்படி ஒரு படத்தை எடுக்க துணிவு இருக்குமா. அவரவர் கொள்கைகளை சொல்லி, லட்சியங்களை சொல்லி அந்த கருத்துக்களை பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய வி‌ஷயம். ஆனால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, எல்லா தமிழ் மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது" என தனது எதிப்பை காட்டினார்.

போராட்டக்களமான திரையரங்குகள்:
நேற்று தமிழகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் காசி திரையரங்கம் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு வைக்கப்பட்டு இருந்த விஜய் பேனரையும் கிழித்து எறிந்தனர். இதுபோல கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கடலூர், விழுப்புரம், ஊட்டி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடந்தது.

சர்கார் படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. போராட்டம்சர்ச்சை காட்சிகளை நீக்க முடிவு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் சிலர் விஜய் பட பேனர்களை கிழித்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். விழுப்புரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் தியேட்டருக்கு பூட்டு போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டம் காரணமாக சில இடங்களில் சர்கார் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

மேலும் நேற்று நள்ளிரவில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முருகதாஸ் வீட்டில் காவல்துறை:
நேற்று இரவு இயக்குனர் முருகதாஸை போலீசார் கைதுசெய்ய அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முருகதாஸ் வீட்டில் அவரை பற்றி விசாரித்த போலீசார் முருகதாஸ் வீட்டில் இல்லை என்று தெரிந்தபின்பு அவரது வீட்டில் இருந்து கிளம்பியதாகவும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் நாங்கள் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றதாகவும், முருகதாஸை கைதுசெய்ய நாங்கள் செலவில்லை என்றும் காவல் துறை விளக்கம் அளித்தது.

பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்:
இதற்கிடையே எதிர்ப்பு வலுப்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சர்ச்சை காட்சிகள் நீக்கப்படலாம் என்றும், இதற்காக மீண்டும் தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்தால், அந்த படத்தை மறுதணிக்கை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று தணிக்கை குழு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சர்க்கார் படத்தின் பிரச்சனையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் படக்குழு மற்றும் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.


Advertisement