அதிர்ச்சி! ஓடும் பேருந்தில் இருந்து பலவந்தமாக பழங்குடியின மாணவிகள் தள்ளிவிட்ட நடத்துநர்! 8 பேருக்கு தலை, கை, கால்... புதுக்கோட்டையில் பரபரப்பு...!!!
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற 11 பழங்குடியின மாணவிகள் கீழே தள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து நடத்துநர் மாணவிகளை இறங்குமாறு வற்புறுத்திய நிலையில், ஏற்பட்ட தகராறில் அவர்கள் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் 8 மாணவிகள் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்தில் இருந்து மாணவிகள் கீழே விழுந்தனர்
பள்ளிக்குச் செல்வதற்காக ரெங்கம்மாள் சத்திரத்தில் மாணவிகள் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி அவர்களை இறங்குமாறு நடத்துநர் வற்புறுத்தியதாக தெரிகிறது. மாணவிகள் மறுத்த நிலையில், மெதுவாகச் சென்ற பேருந்தின் கதவைத் திறந்து ஒரு மாணவியை நடத்துநர் பலவந்தமாக தள்ளியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: குஷியோ குஷி! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை...!!,
இதனால் படிக்கட்டு அருகே நின்றிருந்த மற்ற மாணவிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் 8 பேருக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மாணவிகள் பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு
காயமடைந்த மாணவிகள் வலியால் கதறியதை பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். பின்னர் மாணவிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கீழே விழுந்த நேரத்தில் பின்னால் மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கண்டனம் தெரிவித்து சாலை மறியல்
மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவிகள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நடத்துநர் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: அதிஷ்டகார பாட்டி... முதல்வர் விஜய் அளித்த அன்பு பரிசு! சின்னக்காவூர் திடீர் விசிட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!!!