காதல் தோல்வியால் போலீஸ் ஏட்டு தற்கொலை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபரீதம்..!

காதல் தோல்வியால் போலீஸ் ஏட்டு தற்கொலை: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபரீதம்..!


policeman commits suicide by hanging due to love failure

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள பருத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு (36). இவர் காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறை பனியில் சேர்ந்த இவர் தற்போது கோமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் மணியரசுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருமணத்தை நடத்துவதாக திட்டமிட்டு, பத்திரிக்கை அச்சடித்து உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மணியரசு தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்துள்ளனர், பின்னர் இரவு பணிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மணியரசு காலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இன்று காலைஅவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் மணியரசு செல்போனை எடுக்கவில்லை. இதன் காரணமாக சந்தேகமடைடைந்த  அவரது பெற்றோர் கோமங்கலம் காவல் நிலையத்திற்கு அவரை தேடி வந்தனர்.

மணியரசு தனது பிறந்த நாளை முன்னிட்டு விடுப்பு எடுத்திருந்ததால் குழப்பம் அடைந்த சக காவலர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை. அவர் அருகில் உள்ள காவலர் குடியிருப்பிற்கு சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். இதனால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர், அங்கு சென்று பார்த்த போது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. தட்டி பார்த்தும் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறி பொருத்தும் கம்பியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணியரசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது தெரியவந்தது.

இதற்கிடையே வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குழப்பத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.