தமிழகம்

திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.. சாம்பாரில் விஷம் கலந்த மனைவியின் கள்ளக்காதலன்..! 

Summary:

திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.. சாம்பாரில் விஷம் கலந்த மனைவியின் கள்ளக்காதலன்..! 

கீழையூர் ஒன்றிய திமுக கவுன்சிலர் மரணமடைந்த விவகாரத்தில், அவரின் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து சாம்பாரில் எலிமருந்தை கலந்து கொலை செய்தது அம்பலமானது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், வேட்டைக்காரனிருப்பு சடையன்காடை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 47). இவர் கீழையூர் ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆவார். கல்லீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட தேவேந்திரன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சைக்கு பின்னர் கடந்த டிச. 15 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பிய நிலையில், கடந்த ஜன. 4 ஆம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். சிகிச்சையில் இருந்த தேவேந்திரன், ஜன. 6 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அன்றைய நாளே அவரின் உடல் சொந்த ஊருக்கு அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கணவரின் இறப்புக்கு பின்னர், அவரது மனைவி சூர்யா (வயது 26), தனிமையில் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த தேவேந்திரனின் உறவினர் சதீஷ் கண்ணா என்பவர், சூர்யாவின் செல்போனை ஆய்வு செய்கையில் கள்ளக்காதலனுடன் பேசுவது அம்பலமானது. தேவேந்திரனின் வீட்டில் கடந்த 15 வருடமாக பணியாற்றி வந்த இன்ஜினியர் சந்திரசேகரன் (வயது 32) என்பவருக்கும், சூர்யாவுக்கும் கள்ளக்காதல் பழக்கம் இருப்பது உறுதியானது. இதுகுறித்து சந்திர சேகரிடம் தேவேந்திரனின் உறவினர்கள் விசாரித்தபோது, கடந்த 3 மாதமாக இவர்களுக்குள் கள்ளக்காதல் பழக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் தேவேந்திரனுக்கு தெரியவரவே, அவர் இவர்களின் கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக இருந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்து, கடந்த டிச. 28 ஆம் தேதி தேவேந்திரன் சாப்பிட வைக்கப்பட்ட சாம்பாரில் எலி பேஸ்டை கலந்துள்ளனர். இதனை சாப்பிட்ட தேவேந்திரன் டிச. 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதியாகி, 6 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். கள்ளகாதல் ஜோடி வேட்டைக்காரனிருப்பு வி.ஏ.ஓவிடம் உண்மையை கூறி சரணடைந்துள்ளது. 

இதனையடுத்து, இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement