நள்ளிரவில் " அம்மா, அம்மா " எனக் கேட்ட குழந்தையின் அழுகை சத்தம்! பக்கத்து வீட்டு பெண் சொன்ன உண்மையால்... செஞ்சி சிறுமி கடத்தலில் புதிய திருப்பம்..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி 23 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இதுவரை சிறுமி குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் தவிப்பில் உள்ளனர்.
குடும்பத்தினர் முதல் வடமாநிலத் தொழிலாளர்கள் வரை விசாரணை
தொடக்கத்தில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாததால், கடந்த 21ஆம் தேதி வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: என் மகள் உயிரோடதான் இருக்காள்..! முழு நம்பிகையுடன் கதறி அழுத காத்திருக்கும் தாய்... செஞ்சி சிறுமி வழக்கில் நெஞ்சை உருக்கும் தருணம்..!!!
சிறுமியின் குடும்பத்தினர், பள்ளி ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் எனப் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமி மாயமான இரவில் அருகில் இருந்தவர்கள் தெரிவித்த தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தாய் மீது எழுந்த வதந்திகளால் குடும்பம் வேதனை
சிறுமியை அவரது தாயே விற்றுவிட்டதாகச் சிலர் சந்தேகம் எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தாய் பவானி, பெற்ற குழந்தையைத் தானே ஏன் யாரிடமாவது கொடுக்க வேண்டும் எனக் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற தகவல்கள் தங்களுக்குக் கூடுதல் மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுமி மாயமான இரவில் 'அம்மா, அம்மா' என்று குழந்தை அழும் சத்தம் கேட்டதாகப் பக்கத்து வீட்டுப் பெண் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
தீபாவளிக்காக மகளின் புத்தாடையை வாங்கி வைத்த தாய்
சிறுமி பாதுகாப்பாக மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பவானி கூறியுள்ளார். இதற்கிடையே, மகள் திரும்பி வர வேண்டும் என்று தினமும் விநாயகர் கோவிலில் வழிபட்டு வருகிறார். ஜாதகக் கணிப்புகளும் மகளுக்கு ஆயுள் பலம் இருப்பதாகக் கூறுவதாக நம்பிக்கை தெரிவிக்கும் அவர், மகள் உயிருடன் வீடு திரும்புவார் எனக் காத்திருக்கிறார்.
வரும் தீபாவளிக்காக ஹேமலதாவுக்குப் புதிய ஆடைகளையும் வாங்கி வைத்துள்ளார். மகள் மீண்டும் வீட்டுக்கு வந்து தன்னுடன் பண்டிகையைக் கொண்டாடுவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறார். சிறுமியை விரைவில் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.