தமிழகம் சமூகம்

காட்டுப்பகுதியில் தனியாக இருந்த காதலர்களுக்கு நடந்த கொடூரம்; 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Summary:

lover killed and girl raped in trichy

திருச்சி அருகே காட்டுப்பகுதியில் தனியாக இருந்த காதலர்களை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி காதலனை கொலை செய்துவிட்டு காதலியை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் தமிழ்வாணன்(21). இவர் அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். திருச்சி மாவட்டம் கோவண்டாகுறிச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே கல்லூரியில் தமிழ்வாணன் உடன் படித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பொங்கல் விழாவான நேற்று இருவரும் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இருக்கும் மலை மாதா கோவிலில் தனியாக சந்தித்துள்ளனர். இந்த பகுதியானது அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியாகும். சிறிது நேரம் அங்கு பொழுதைக் கழித்த அவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பி உள்ளனர்.

ஊருக்கு செல்லும் வழியில் குமலூர் பகுதியில் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அந்த காதலர்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சிறிது நேரத்தில் தகாத முறையில் பேசத் துவங்கிய அவர்களை தமிழ்வாணன் எதிர்த்து பேசியுள்ளார். மேலும் தன் காதலியிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்த அவர்களை தடுத்துள்ளார் தமிழ்வாணன்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் தமிழ்வாணனை குத்தியுள்ளார். தமிழ்வாணன் அங்கேயே மயங்கி விழ அவருடைய காதலியை காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்ற அந்த நான்கு பேரும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்துப்பட்ட கல்லூரி மாணவர் தமிழ்வாணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement