வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்; வட மாநிலத்தவர் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை..!!
தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர், மாநிலம் முழுவதும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மற்றும் கோவையில் இயங்கிவரும் நூலாடை நிறுவனங்களில் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின. பீகாரை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. பீகார் அரசு, தமிழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கோரியது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அது போலி வீடியோ என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இது போன்ற வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. இதை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாக சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் வடமாநிலத்து பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பகிரப்பட்டது.
அந்த பெண் இவ்வாறு கூறியுள்ளார், வாய் பேச முடியாத எனது குழந்தையை தூக்கிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை என் குழந்தைக்கு இலவசமாக செய்து வைத்தேன்.
இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழ்நாடு தான் காரணம் என்று அந்த பெண் கூறியது யாராலும் மறக்க முடியாதது.
தாய்த் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்துக்காக, கல்விக்காக, வேலைக்காக என்று பல மாநில மக்கள் இங்கு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.
அவர்கள் இங்கு வந்து மிக உயர்ந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக வேலைவாய்ப்புகளை தேடி அனைத்து மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டுக்கு வருவது அதிகரித்துள்ளது. கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை முடியும் என்பதே, அவர்களின் இங்கு வருவதற்கு காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கிறது. மேலும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பையும் அரசு உறுதி செய்து வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையின் போது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
சென்னை பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. அவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்த முகாமுக்கு நானே நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டதை உறுதி செய்தேன்.
ரேஷன் கார்டு இல்லாத, வேலைகளை இழந்த ரேஷன் கார்டு இல்லாத, 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக 1-4-2021 முதல் இதுவரை ரூ.6.27 கோடி அனைத்து மாநில தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலில் அவர்கள் வேலை செய்யும் போது, பாதுகாப்பாக வேலை செய்யவும், விபத்துகளை தவிர்க்கவும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 456 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 43 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய வலைத்தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படி வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையை காண பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் இது மாதிரியான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது எண்ணம் ஈடேறாது.
இங்கு வசிக்கும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும், இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், இப்போதும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ளனர். அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கிறது.
வேறு மாநிலங்களில் நடந்த சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடந்ததாக, வதந்தி பரப்பி, அச்சத்தையும், பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புகின்றனர். இவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்கின்றனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது.
வடமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் தகவல் கெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழக மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது. எனவே, ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூக அக்கறையை உணர்ந்து, ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது குறித்து நான் பேசியுள்ளேன். அனைத்து தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு ஏற்படாது என்பதையும் அவருக்கு உறுதியாக சொல்லியுள்ளேன். வளமான மற்றும் அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.