"குடிக்காதான்னு சொல்ல முடியாது" - கள்ளச்சாராய மரண விவகாரத்தில் கள்ளக்குறிச்சியில் கமல் பேட்டி.!Kamal Pressmeet on kallakurichi 23 June 2024 

போதைப்பொருளை தடுக்க முயன்ற அமெரிக்காவின் செயலால், மாபியாக்கள் இன்று அதிகமாகிவிட்டது. ஆனால், போதைப்பொருள் உற்பத்தி குறையவில்லை. உலகம் கற்றுக்கொண்ட இப்பாடத்தை வைத்து, கள்ளச்சாராய விவகாரத்திலும் செயல்பட வேண்டும் என அரசுக்கு அறிவுரை கூறினார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என ரசிகர்களால் வருணிக்கப்படும் கமல் ஹாசன்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 56ஐ எட்டிவிட்டது. இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி, மெத்தனால் என்ற உயிர்க்கொல்லியை விற்பனை செய்தவர் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

800 க்கும் அதிகமானோர் கைது

இந்த சம்பவத்தையொட்டி பிற மாவட்டத்திலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வடக்கு காவல் மண்டலத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு 800 க்கும் அதிகமான கள்ளச்சாராய வியாபாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய சோகமாக கவனிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: கொண்டாட்டங்கள் வேண்டாம்.. உடனே இதை செய்யுங்க.! கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவு.!

கள்ளக்குறிச்சியில் குவியும் முக்கியப்புள்ளிகள்

கள்ளக்குறிச்சிக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, திரைபிரபலங்கள் என பலரும் சென்று தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் & மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், கள்ளக்குறிச்சிக்கு இன்று நேரில் சென்று கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் நேரில் சந்தித்தார். 

வள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கிறது

இந்நிலையில், அவர் கள்ளக்குறிச்சியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்த தருணத்தை நாம் அரசியல் ஆதாயமாக, விமர்சனமாக பார்க்க கூடாது. நமக்கு கடமை உள்ளது. வள்ளுவரின் கள்ளுண்ணாமை குறித்து இருக்கிறது என்றால், அப்போதில் இருந்து இது இருக்கிறது என்பது அர்த்தம். இந்த சாராய வியாபாரத்தை செய்யும் எந்த அரசாக இருந்தாலும், அதில் இருந்து வரும் வருமானத்தின் ஒரு பகுதியை கண்டிப்பாக மனோதத்துவ முறையில் அளவுக்கு செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வை மேற்கொண்டாக வேண்டும். 

கொஞ்சம் குடிங்க

சாலை விபத்து நடப்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. வாகனத்தின் வேகத்தை குறைக்க முடியாது. அதனாலேயே எக்ஸ்பிரஸ் வே எனப்படும் அதிவிரைவு சாலை உள்ளது. சாராய விவகாரத்தில், மிகப்பெரிய ஆலைகள் வைத்து அதனை தயார் செய்கிறார்கள். அதற்கு விற்பனை கடைகளும் உண்டு. மருந்து கடைகளை விட அதிகமாக டாஸ்மாக் இருக்காது. இவர்களுக்கு குடிக்காதே என்ற அறிவுரையை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள் என்று கூறும் அறிவுரை தான் முக்கியம். 

அமெரிக்காவின் நிலையை பாருங்களேன்

உங்களின் உயிர் முக்கியம் என்பதன் அறிவுரை வழங்கும் இடங்கள் டாஸ்மாக் அருகில் இருக்க வேண்டும். இதைத்தவிர வேறு மருந்து இல்லை. உடனடியாக இதனை இழுத்து மூடுங்கள் என்று கூறுவது தவறான கருத்து. அதற்கு உலகின் பல இடங்களில் முன் உதாரணம் இருக்கின்றன. அமெரிக்காவிலேயே பரிபூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டபோதிலும், மாபியா அதிகமாகித்தான் இருக்கிறது. இதுதான் உலகம் கற்றுக்கொண்ட பாடம். டாஸ்மாக்குக்கு நிகராக விழிப்புணர்வு மையங்கள் இருக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: #Breaking: 38 பேர் பலியான விஷசாராய விவகாரம்; பார்வை குறைபாடை சந்திக்கும் நோயாளிகள்.. கண்ணீரில் உறவினர்கள்.!