கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.. பரபரப்பு கேள்விகள்..!



Kallakurichi srimathi dead issue

கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறுமி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் இருக்கும் சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பல பரபரப்பு தகவல்கள் வெளியானது. குடும்பத்தினரின் போராட்டமும் காவல்துறையால் கலைக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை மாணவர் சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த போராட்டமானது இறுதியில் வன்முறையில் முடிந்த நிலையில், பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. மேலும், பள்ளியின் பேருந்துகள், அலுவலகத்தில் உள்ள பல சான்றிதழ்கள் போன்றவை தீக்கு இரையாக்கப்பட்டன. கூடுதல் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நீதிபதி தெரிவிக்கையில், "கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும். மனுதாரர் தனது வக்கீலுடன் பிரேத பரிசோதனையின் போது இருக்க அனுமதி வழங்கப்படுகிறது. 

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டு எதற்காக போராட்டம் நடத்தினீர்கள்?. போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார்?. மாணவியின் இறப்புக்கு காரணம் என்ன?. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து சிறுமியின் தந்தை 14 ஆம் தேதி இங்கு வந்துள்ளார். 

வன்முறைக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சிறப்பு படை அமைத்து கண்டறிய வேண்டும். 4500 மாணவர்களின் நிலை என்ன?. மாணவர்களின் சான்றிதழ்கள் திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தை பொறுத்தவரையில் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 

சிபிசிஐடி விசாரணை தவிர்த்து வேறு என்ன கேட்கிறார்கள்? இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல., திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம். போலீசார் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர்கள் சட்டத்தை நிலை நாட்டவில்லை. வன்முறை குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.