தமிழகம்

ஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.!

Summary:

ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் 4 வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இங்கு ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் தங்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில், ஓசூர் - பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை நேற்று காலை வழக்கம்போல் திறந்து ஊழியர்கள் பணியை தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல், துப்பாக்கியைக் காட்டி, ஊழியர்களை கட்டிவைத்துவிட்டு லாக்கர் சாவியை பெற்று நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ நகைகளை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை கும்பல் கொள்ளையடித்து  எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக ஊழியர்கள் கூறுகின்றனர். கொள்ளை கும்பலைச் சேர்ந்த அனைவருமே தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பட்டப்பகலில் துப்பாக்கியைக் காட்டி அரங்கேற்றப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வரும் போலீசார், ஊழியர்கள் யாருக்கேனும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Advertisement