37 நாளாக தொடரும் மர்மத்தில் வெளிவரப்போகும் உண்மை! செஞ்சி சிறுமி மாயம் வழக்கின் சாம்பல் சோதனை அறிக்கை....! திக் திக் நிமிடத்தில் ஆலம்பூண்டி கிராமம்..!!!



hemalatha-missing-case-cbcid-investigation-ASX8UG

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போய் 37 நாட்களைக் கடந்தும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, வீட்டின் எதிரே உள்ள செங்கல் சூளையில் சேகரிக்கப்பட்ட சாம்பல் மாதிரிகளின் தடயவியல் அறிக்கை வெளியாக உள்ளதால், வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெற்றோரிடம் தலா 7 மணி நேரம் விசாரணை

கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்ற வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா, மறுநாள் மாயமானதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் ஆரம்பத்தில் கதறி அழுத தாய்! ஆனால் இப்போ... திகைத்துப் போன சிபிசிஐடி! 35 நாட்களுக்குப் பின் சிக்கிய அதிர்ச்சி தகவல்...!!!

ஆலம்பூண்டி அரசுப் பள்ளியில் வைத்து சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் 7 மணி நேரமும், தாய் பவானியிடம் 7 மணி நேரமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் அளித்த வாக்குமூலங்களை அதிகாரிகள் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில், சிறுவாடி காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 4 தனிப்படைகள் பிரிந்து சிறுமியைத் தேடி வருகின்றன.

செங்கல் சூளையில் தடயவியல் சோதனை

சிறுமி மாயமான இரவில் வீட்டிற்கு எதிரே உள்ள செங்கல் சூளையில் செங்கல் சுடும் பணி நடைபெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விழுப்புரம் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராஜு தலைமையிலான குழுவினர், மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு சோதனை நடத்தினர்.

சூளையின் உட்பகுதியில் இருந்து சாம்பல் மற்றும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மனித எலும்புத் துகள்கள் அல்லது உயிரியல் தடயங்கள் உள்ளனவா என்பது தெரியவரும்.

தடயவியல் அறிக்கையை எதிர்பார்க்கும் கிராம மக்கள்

ஆய்வில் மனிதத் தடயங்கள் கண்டறியப்பட்டால், வழக்கின் விசாரணை புதிய கோணத்தில் செல்லக்கூடும். அதேசமயம், அத்தகைய தடயங்கள் இல்லை என்பது உறுதியானால், செங்கல் சூளை தொடர்பான சந்தேகங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை குறையலாம். இதனால் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் சிபிசிஐடி விசாரணை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தடயவியல் அறிக்கை வெளியாகும் வரை எந்த முடிவுக்கும் வர முடியாது. 37 நாட்களாகத் தொடரும் தேடுதல் வேட்டையில் சிறுமி குறித்த முக்கியத் தகவல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஆலம்பூண்டி கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.

 

இதையும் படிங்க: 28 நாட்கள் ஆகிட்டு... சிறுமி மாயமான பிறகு வீட்டில் கிடைக்கும் தடயத்தில் சிபிசிஐடிக்கு வந்த சிக்கல்! ரவுடி ராஜதுரையிடம் சிக்கிய திடுக்கிடும் ரகசியங்கள்..!!!