கனமழை தாக்கம்.. காய்கறி விலை கிடுகிடு உயர்வு.. பொதுமக்கள் கவலை.!



Heavy Rains Trigger Sharp Surge in Vegetable Prices: Brinjal Hits ₹140/kg, Tomato ₹80/kg in Nellai, Tenkasi & Thoothukudi

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் வயல்வெளிகள் வெள்ளத்தில் மூழ்கின. வரத்து குறைவால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்தது. வங்க கடல் பகுதியில் உருவான டிட்வா புயல் இலங்கையை கடந்து சென்னை நோக்கி வந்து வலுவிழந்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான வயல்வெளிகள் தண்ணீரால் சூழப்பட்டு பயிர்கள் சேதம் அடைந்தன. காய்கறி விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

காய்கறி விலை உச்சம்:

இதனால் சந்தைகளுக்கு இயல்பாக வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனை அடுத்து சுபமுகூர்த்த தினம் உட்பட பல்வேறு காரணங்களால் காய்கறிகளின் விலை உச்சம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தை பொருத்தவரையில் வெள்ளை கத்திரிக்காய் கடந்த வாரம் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் வெள்ளை கத்திரிக்காய் கிடைக்கவும் இல்லை. 

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

காய்கறி விலை

தக்காளி முதல் தேங்காய் வரை:

பச்சை, நீல நிற கத்திரிக்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை தவிர்த்து தக்காளி கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காயும் கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ரூ.75 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது அதுவும் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் பாதிப்பு: 

ஊட்டி கேரட் ரூ.60-க்கும், உருளைக்கிழங்கு ரூ.35க்கும், முட்டைக்கோஸ், பீட்ரூட் ஆகியவை தலா ரூ.40 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை, தை மாதம் பிறக்க உள்ள நிலையில், கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து காய்கறி விலை உயர்வு பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: Breaking: வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.90,000ஐ கடந்தது சவரன் தங்கம்.!