குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்த தியாகிகளின் மணிமண்டபத்துக்கு தடை.? நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!



freedom-fighter-manimandabam-case

கடந்த 1920-ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில், கைரேகைச் (குற்றப் பரம்பரை) சட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடந்தது. அந்த போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். 1920-ம் ஆண்டு, உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில், இச்சட்டத்தை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

பெருங்காமநல்லூரில் சுட்டுக்கொல்லப்பட்ட 16 பேரும் பிறமலைக்கள்ளர் என்ற ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பிட்ட சமூகத்தினரை பிறப்பின் அடிப்படை கொண்டு குற்றப்பரம்பரையினர் என கருதக்கூடிய அந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்தான் அது. அதாவது குற்றப்பரம்பரையினர் என அறிவிக்கப்பட்ட சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். 

இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும்கூட விதிவிலக்கு கிடையாது. இன்னும் அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய போராட்டம் தான் 1920-ம் ஆண்டு, பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டம்.

இந்த நிலையில், போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு ரத்தம் சிந்திய இடத்திலேயே அவர்கள் நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பிரமலைக் கள்ளர் சமூகத்தை சேர்ந்த பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2020 செப்டம்பர் 19-ஆம் தேதி பெருங்காமநல்லூரில் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் அமைக்க தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை பெருங்காமநல்லூர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் நினைவு மண்டபம் அமைக்க சரியானதாக இல்லை. ஆகவே பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக நீதிமன்றம் எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யகூறிய இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.