தீபாவளிக்கு புத்தாடை கேட்ட மகள்.. நோ சொன்ன தந்தை.. மகள் செய்த அதிர்ச்சி காரியம்.. கதறும் குடும்பத்தினர்

தீபாவளிக்கு தந்தை புத்தாடை வாங்கி தராத சோகத்தில் 17 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளிக்கு தந்தை புத்தாடை எடுத்து தராத சோகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள கழுகாசலபுரம் கீழுரில் வசித்துவருபவர் குருசாமி. விவசாயம் பார்த்துவரும் இவருக்கு அமுதா என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். அமுதா 12 ஆம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் தனக்கு தீபாவளிக்கு புது உடை எடுத்து தருமாறு அமுதா தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
தீபாவளிக்கு தன்னால் புத்தாடை வாங்கி தர முடியாது எனவும், பொங்கலுக்கு புத்தாடை வாங்கி தருவதாகவும் குருசாமி தனது மகளிடம் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அமுதா தொடர்ந்து சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அவரது குடும்பத்தினர் உடனே அவரை தூக்கிச்சென்று கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதித்தநிலையில், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்றுவந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.