உயிர் போவதற்காக தந்தை குடித்த குளிர்பானம்.. மீதி இருந்ததை குடித்த 7 வயது மகளும் பலியான சோகம்.. 2 உயிரை காவு வாங்கிய கந்துவட்டி

உயிர் போவதற்காக தந்தை குடித்த குளிர்பானம்.. மீதி இருந்ததை குடித்த 7 வயது மகளும் பலியான சோகம்.. 2 உயிரை காவு வாங்கிய கந்துவட்டி


Father and daughter dead for Kandhu vatti kotumai

கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்துகொண்டநிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நாகந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 42). விவசாய வேலை பார்த்துவரும் இவருக்கு திருமணம் முடிந்து மங்கையர்கரசி என்ற மனைவியும், ஐஸ்வர்யா(9), ஆர்த்தீஸ்வரி(7) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

அய்யப்பன் குடும்ப சுமை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நாகந்தூரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகர்(42) என்பவர் மூலமாக திண்டிவனம் இடையான்குளத்தை சேர்ந்த சம்பத் என்பவரிடம் இருந்து ரூ.25 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கும்போது அய்யப்பன் வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து போடு கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடன் வாங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து 50 ஆயிரமாக தரவேண்டும் எனவும், இல்லையெனில் வெற்று பாத்திரத்தில் 2 லட்சம் கடன் வாங்கியதாக எழுதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உனது சொத்துக்களை ஜப்தி செய்துவிடுவோம் என ராஜசேகரும், சம்பத்தும் அய்யப்பனை மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அய்யப்பன், தனது சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த அய்யப்பன் கடந்த 20 ஆம் தேதி மாலை 5 மணியளவில் தனது வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார்.

பாதி குளிர்பானத்தை குடித்தபோது வாந்தி வந்ததால் மீதி குளிர்பானத்தை அப்படியே வைத்துவிட்டு அய்யப்பன் வாந்தி எடுப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அநேரம் பார்த்து வீட்டிற்கு வந்த அய்யப்பனின் இளைய மகள் ஆர்த்தீஸ்வரி மீதம் இருந்த குளிர்பானத்தில் விஷம் இருப்பது தெரியாமல் அதை எடுத்து குடித்துள்ளார்.

பின்னர் தந்தை மகள் இருவரும் வீட்டில் மயங்கி கிடந்தநிலையில் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில் தந்தை மகள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அய்யப்பனின் மனைவி மங்கையர்க்கரசி கொடுத்த புகாரை அடுத்து போலீசார் ராஜசேகரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சம்பத்தை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே சம்பத்தை கைது செய்தால்தான் இருவரின் உடல்களையும் வாங்குவோம் என அய்யப்பனின் உறவினர்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை அடுத்து சம்பத்தை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அய்யப்பனின் உறவினர்கள் களைந்து சென்றனர். கந்து வட்டி கொடுமையால் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.