ஒவ்வொரு நாளும் நரகம்.. குடிகார கணவனால் சிதைந்த குடும்பம்.. தமிழகத்தில் பயங்கரம்.!



Drunken Abuse Turns Fatal: Wife and Son Surrender After Killing Man in Ramanathapuram

கணவரைக் கொலை செய்து உடலை கடற்கரையில் வீசிய தாய் - மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

போதை கணவன்:

Ramanathapuram Crime News Today: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி, இருமேனி பகுதியைச் சேர்ந்த 55 வயதான குப்புசாமி, மீன்பிடி தொழில் செய்து வந்தவர். அவரது மனைவி சீனியம்மாள். இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். பாலமுருகனுக்கு திருமணமாகி, பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே தனியாக வசித்து வருகிறார். குப்புசாமி தொடர்ந்து மதுபானம் அருந்தி குடும்பத்தினரை துன்புறுத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

சண்டையில் நடந்த சம்பவம்:

கடந்த பிப்ரவரி 5 அன்று வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த குப்புசாமி, மனைவி சீனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாக இருந்ததால், அவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு பதறிய மகன் பாலமுருகன் வீட்டிற்குள் ஓடி வந்து தடுத்துள்ளார். தொடர்ந்து மிரட்டிய குப்புசாமியை சீனியம்மாள் தள்ளியதாகவும், பின்னர் அருகில் கிடந்த கயிற்றால் கழுத்தை நெரித்ததில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தாய் - மகன் கொலையை மறைக்க முயற்சி:

சம்பவத்திற்குப் பின் சந்தேகம் எழாமல் இருக்க, தாய் - மகன் இருவரும் குப்புசாமியின் உடலை இருமேனி கடற்கரை பகுதியில் கொண்டு சென்று வீசி விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய சீனியம்மாள், மறுநாள் காலை தனது கணவர் மீன்பிடிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் அழுது புலம்பியுள்ளார். மகன் பாலமுருகனும் இதே தகவலை கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். 

ramanathapuram

காவல் நிலையத்தில் சரண்:

இதையடுத்து, உச்சிப்புளி காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, குப்புசாமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். பரிசோதனைக்குப் பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, சீனியம்மாள் மற்றும் பாலமுருகன் இருவரும் நேரில் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு வந்து, தாங்களே கொலை செய்ததாக கூறி சரணடைந்தனர்.

மனசாட்சிக்கு பயந்து வெளியான உண்மை:

விசாரணையில், மனசாட்சி உறுத்தியதால் உண்மையை மறைக்க முடியவில்லை என அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து, தாய் - மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சீனியம்மாள் பரமக்குடி பெண்கள் சிறையிலும், பாலமுருகன் ராமநாதபுரம் மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

கணவனின் போதை பழக்கம் அவனை அழித்தது மட்டுமின்றி 2 பேரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியதோடு, இளைஞரின் குடும்பத்தை தவிக்கவிட்டுள்ளது.

இதையும் படிங்க: எலும்புக்கூடாக 2 வயது குழந்தை.. உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கொன்று வீசிய தாய்.. மதுரையில் கோரம்.!