19 நாட்களாக கிணற்றுக்குள் தவித்த நாய்.! ட்ரோன் கேமரா மூலம் தேடிய ஆசிரியருக்கு காத்திருந்த ஆச்சர்யம்.!

19 நாட்களாக கிணற்றுக்குள் தவித்த நாய்.! ட்ரோன் கேமரா மூலம் தேடிய ஆசிரியருக்கு காத்திருந்த ஆச்சர்யம்.!



dog saved from well

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி ஊராட்சி வெள்ளையாண்டிபட்டியை சேர்ந்த செல்வின் அன்பரசு என்ற ஆசிரியர் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் வளர்த்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த மாதம் 18-ஆம் தேதி மாலை அப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதில் அவர் வளர்த்த நாய் வீட்டில் இருந்து வெளியே ஓடியது. 

அந்த நாயின் கழுத்தில் செயின் அணிந்து இருந்ததால் வயல்வெளிகளில் செடி கொடிகளில் எங்காவது சிக்கியிருக்கும் என ஆசிரியர் மற்றும் அவரது உறவினர்கள் நாயை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் அந்த நாய் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாயை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர் ட்ரோன் கேமரா உதவியுடன் காட்டுப்பட்டி ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில் ட்ரோன் கேமரா மூலம் நாயை தீவிரமாக தேடி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளையாண்டிப்பட்டி பகுதியில் ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருந்த நபருக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து நாய் கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் பார்த்த போது கிணற்றில் நாய் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் உடனடியாக ஊர்பொதுமக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த இளைஞர்கள் கிணற்றில் இறங்கி நாயை பத்திரமாக மீட்டனர். 19 நாட்களுக்கு பிறகு காணாமல் போன நாய் கிடைத்ததால் ஆசிரியரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.