கடலூர்: பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. கனமழை அலர்ட்டால் முதல் மாவட்டமாக அறிவிப்பு.! 



Cuddalore Announces Holiday for Schools and Colleges on November 29 Due to Cyclone Tidva

கனமழை எச்சரிக்கை காரணமாக முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் மழை (Tamilnadu Rains):

வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, டிட்வா புயலாக உருவாகியது. இந்த புயல் நவம்பர் 28ம் தேதியான இன்று இலங்கையில் கரையை கடந்து வருகிறது. தொடர்ந்து, புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருகிறது. இந்த புயலின் தாக்கத்தால் டெல்டா, வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்.!

நாளைய வானிலை (Tomorrow Weather): 

அதாவது, நவம்பர் 29ம் தேதியான நாளை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மயிலாடுதுறை, சிவகங்கை, அரியலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர்த்து கடலூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு சுமார் 50 கிமீ வேகம் முதல் 70 கிமீ வேகம் வரை வீசலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று மஞ்சள் எச்சரிக்கையும், நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கனமழை சமயத்தில் பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடைபெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கடலூர் முதல் மாவட்டமாக நாளை விடுமுறையை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்தடுத்து பிற மாவட்டங்களில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மக்களே வெளியே வராதீங்க... இரவு 7 மணி வரை இந்த 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் அறிவிப்பு.!!