கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை.... திருச்சி அருகே தனியார் கல்லூரி விடுதியில் அதிர்ச்சி சம்பவம்...!!



College student hangs herself... Shocking incident in private college hostel near Trichy..

திருச்சி அருகே உள்ள ஓரு‌ தனியார் கல்லூரி விடுதியில் தஞ்சையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வசித்து வருபவர் முகமது சித்திக். இவரது மகள் அப்ரின் பாத்திமா(20). இவர் திருச்சி கே.கே.நகர் அருகில் உள்ள சாத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் பெண்கள் கல்லூரியில், விடுதியில் தங்கி பிசிஏ இறுதி வருடம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் அவரது அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது தோழிகள் ஜன்னல் வழியாக பார்த்த போது அப்ரின் பாத்திமா மின்விசிறியில் தூக்குபோட்டு  தொங்கி கொண்டிருந்தார். 

இதை பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவரது தோழிகள் விடுதி நிர்வாகிக்கு தகவல் அளித்தனர். இது குறித்து விடுதி காப்பாளர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், கே.கே.நகர் காவல்துறையினர், மாணவியின்  உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, மாணவியின் அறையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. 

அந்த கடிதத்தில் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக மாணவி எழுதியிருந்தார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.