இந்த உரிமம் வச்சிருக்கீங்களா? ரூ.5,000 அபராதம்.. செல்லப்பிராணி பிரியர்களே கவனம்.!



Chennai Corporation to Fine ₹5,000 for Unlicensed Pet Dogs; Door-to-Door Inspections Announced

செல்லப்பிராணிகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி, மைக்ரோ சிப் கட்டாயம் என்பதால், வீடு வீடாக ஆய்வு நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பணிகள் தீவிரம்:

தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த கணக்கெடுப்பில், சுமார் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை சிகிச்சை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளியாகும் அறிவிப்பு!

மைக்ரோ சிப் பொருத்தம்:

மாநகராட்சி தரவுகளின்படி, தற்போது வரை சுமார் 1.47 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 16,611 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு, அடையாளத்திற்காக மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கடித்த சம்பவங்களும் அதிகரித்ததால், வளர்ப்பு நாய்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

Pet Dog License

உரிமம் இல்லாத நாய்கள்:

அதனைத் தொடர்ந்து, சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை குறித்து மாநகராட்சி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் தனியார் வீடுகளில் வளர்க்கப்படுவது தெரியவந்தது. இருப்பினும், அதில் சுமார் 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு, முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீதமுள்ள நாய்கள் உரிமம் இன்றி வளர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூ.5,000 அபராதம்:

இந்த சூழலில், உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், நாய் வளர்ப்பவர்கள் உடனடியாக மாநகராட்சி மூலம் உரிமம் பெற வேண்டும் என்றும், ஆண்டுதோறும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பொதுமக்கள் பாதுகாப்பையும், விலங்குகளின் நலனையும் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.