
chennai airport - tamilisai - sophia
சோபியா தன்மீது தொடுத்துள்ள வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சோபியா கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக ஊர் திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்ய தயாராகும்போது, அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த தமிழிசை சவுந்தரராஜனை கண்டதும் 'பாசிக பாஜக ஒழிக' என்று முழக்கமிட்டார்.
இதனால் கோபம் அடைந்த தமிழிசை அவர் மீது வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார். மேலும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரின் மீது புகார் தெரிவித்திருந்தார். இதனால் சோபியா கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் மீது, சோபியாவின் தந்தை எனது மகளை
தமிழிசை மிரட்டியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் தற்பொழுது, தமிழிசை சோபியாவை மிரட்டியது உண்மையாகும் பட்சத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஆராய்ச்சி மாணவி சோபியா, தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டுச் செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும் எனினும், நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால் அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார் அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன் என்று அவர் தெரிவித்தார்.
சோபியா அளித்த மற்றொரு புகாரில், அவர் சார்ந்துள்ள சமூகத்தை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். இதன்மூலம் அவர் சார்ந்துள்ள சமுதாய மக்களின் ஆதரவை சோபியா நாடுகிறார் என்பது தெரிகிறது. இந்த விவகாரத்தை மாணவி சோபியா தரப்பினர் மிகவும் உள்நோக்கத்துடன் அணுகுகிறார்கள். நிச்சயம் இதை சட்டப்படி எதிர்கொள்வேன், அதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.
Advertisement
Advertisement