"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
பிட்காயின் எனக்கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்ப முயன்ற பெண்! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு கடந்த ஆண்டு முகநூல் மூலமாக மாதேஷ் என்பவர் பழக்கமானார். இந்திராணிக்கு மாதேஷ் என்பவர், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியான வாவ் காயின் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் அண்ணாநகரில் வசித்து வரும் பத்மஜ், ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர், இணையத்தில் வாவ் காயினில் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு ஆயிரம் மடங்காக உயரும் என ஆசையைத் தூண்டியுள்ளார்
இதையடுத்து, தனது வங்கிக்கணக்கிலிருந்து இணையம் வழியாக 18 லட்ச ரூபாய் பணத்தை மொத்தமாக பத்மஜ், ஆர்த்தி உள்ளிட்டோர் நடத்தி வரும் நிறுவன வங்கிக் கணக்கிற்கு இந்திராணி மாற்றியுள்ளார். 6 மாதத்தில் முதலீடு செய்த 18 லட்ச ரூபாய் திரும்ப கிடைக்கும் என கூறிய நிலையில் பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தப் பணம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து விசாரித்தபோது இந்திராணியிடமிருந்து பெற்ற பணத்தை எந்த கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்யாமல் அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி தொடர்ந்த மனுவில், வழக்குப்பதிவு செய்ய அண்ணாநகர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மோசடி தொடர்பான பிரிவின் கீழ் பத்மஜ், ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தப்பி செல்ல முயன்ற பத்மஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். கிரிப்டோ கரன்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதால், அதில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என தமிழக போலீசார் எச்சரித்துள்ளனர்.