கால்பந்து வீரங்கனையின் மரணத்திற்கு இதுதான் காரணமா?!.. கலங்கவைக்கும் அதிர்ச்சி பின்னணி..!

கால்பந்து வீரங்கனையின் மரணத்திற்கு இதுதான் காரணமா?!.. கலங்கவைக்கும் அதிர்ச்சி பின்னணி..!



Careless treatment by doctors has cost the life of an innocent student

மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலி வாங்கி உள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார், இவரது மனைவி உஷாராணி. இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் பிரியா (17) என்ற மகளுடன் நான்கு பிள்ளைகள். மகள் பிரியா சிறந்த கால்பந்து வீராங்கனை. இவர் ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு துறையில் படித்து வந்தார். 6-ஆம் வகுப்பில் இருந்து கால்பந்து விளையாட்டிற்கு பயிற்சி எடுத்து வந்த பிரியா மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாடி வந்தார். 

கடந்த மாதம் 20-ஆம் தேதி பிரியா பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வலது காலில் தசை பிடிப்பு போல் வலி ஏற்பட்டதால், வலியால் துடித்த பிரியாவை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்து காலில் கட்டு போட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த பிறகும் வலி குறையாததால் இரண்டு நாட்களுக்கு பிறகு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு காலில் போடப்பட்டிருந்த கட்டுக்களை பிரித்து பார்த்த போது ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் தடைபட்டு தொற்றுக்கள் உருவாகி இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து காலை துண்டித்தால் மட்டுமே தொற்றுக்கள் மேற்கொண்டு பரவாது என்று முடிவு செய்தனர். அதன்படி கால் மூட்டின் மேல் பகுதியில் இருந்து  துண்டித்து அகற்றப்பட்டது.

இதை தொடர்ந்து பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இருப்பினும் பிரியாவின் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகவில்லை. சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பிரியா உயிரிழந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சையால்  ஒரு அப்பாவி மாணவி உயிரிழந்தார்.

குறிப்பிட்ட ஆபரேசன் செய்ததும் கட்டு போட்டிருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் மிகவும் இறுக்கமாக கட்டு போட்டுள்ளனர். எனவே ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் கால் அழுகி தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவே பிரியாவின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்துள்ளது. 

தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவி பிரியாவின் உடலை பார்த்து கண்கலங்கினார். அதன் பிறகு பிரியாவின் பெற்றோருக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறினார். ஏற்கனவே பிரியா உயிருடன் இருந்த போது நேரில் பார்த்து தைரியம் சொல்லி, பேட்டரியால் இயங்கும் செயற்கை கால் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி இருந்தார். இந்நிலையில் பிரியாவின் இழப்பு துயரத்தை தருவதாக அவர் கூறினார்.