தமிழகம்

லாரி மீது மோதியதில் கார் சுக்குநூறாக நொறுங்கிய பரிதாபம்.. குடும்பத்தாருக்கு நேர்ந்த கொடூரம்.!

Summary:

லாரி மீது மோதியதில் கார் சுக்குநூறாக நொறுங்கிய பரிதாபம்.. குடும்பத்தாருக்கு நேர்ந்த கொடூரம்.!

சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் காரில் சென்ற போது, லாரி மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் செந்தில் (வயது 43). இவர் அதே பகுதியில் மருந்து கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இவரது மனைவி யசோதா (வயது 39). தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் பிரகாஷ் (வயது 21). மகள் சபி பிரபா (வயது 18). 

இவர்கள் நால்வரும் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி கொடைக்கானலுக்கு காரில் குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது காரை பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற சரக்கு லாரி மீது கார் திடீரென்று பயங்கரமாக மோதியுள்ளது. 

இதனால் காரின் முன் பகுதி முழுவதுமாக நொறுங்கிய நிலையில், கார் ஓட்டிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்த செந்திலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், யசோதா மற்றும் சபி பிரபா ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வடமதுரை காவல் துறையினர் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement