பாத்ரூமில் அழுகிய நிலையில் பிணம்: தொழிலதிபர் மர்ம மரணம்!,, தீவிர விசாரணையில் போலீசார்..!Businessman's body rotting in bathroom dies mysteriously

கோயமுத்தூர் மாவட்டம், ரத்தினபுரி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (56). இவர் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.

குமார் தனது நிறுவனத்திற்கு அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி பெங்களுரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று, குமாரின் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் அந்த அறையில் இருந்து தூர்நாற்றம் வந்துள்ளது.

இதன் காரணமாக சந்தேகம் அடைந்த ஊழியர், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் உள்ள கழிவறையில் குமார் உயிரிழந்த நிலையில் கிடந்தார். குமார் உயிரிழந்து  2 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.