ஆசையாக தொடங்கிய புது வாழ்க்கை.. ஒரு நாள் மாப்பிளை வீட்டிலிருந்து வந்த போன் கால்.. கதறும் உறவினர்கள்!

ஆசையாக தொடங்கிய புது வாழ்க்கை.. ஒரு நாள் மாப்பிளை வீட்டிலிருந்து வந்த போன் கால்.. கதறும் உறவினர்கள்!



Bride dead with in a month of marriage due to dowry issue

திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. கேஸ் டிஸ்ட்ரிபுட்டரான இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் தனசிங்குபாளையத்தை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் பிப்ரவரி 01-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு மணமக்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள மாப்பிள்ளையின் வீட்டில் தங்கி குடும்பம் நடத்திவந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்தே பணம், நகை, வீட்டு பாத்திரம் ஆகியவற்றை கேட்டு ஏழுமலை அவரது மனைவி சிவபாக்யத்தை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிவபாக்கியம் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தநிலையில், தாலி பிரித்து போடும் சடங்கின்போது நகை மற்றும் வீட்டு பாத்திரத்தை தருவதாக கூறியுள்ளனர்.

இதனிடையே ஏழுமலை தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு, அவரை தாக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவும் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நள்ளிரவில் சிவபாக்கியம் இறந்துவிட்டதாக ஏழுமலை போன் செய்து பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு பதறிப்போன சிவபாக்யத்தின் பெற்றோர் புதுச்சேரி வந்து சிவபாக்கியத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தங்கள் மகளை ஏழுமலைதான் அடித்து கொலை செய்துவிட்டார். அதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யவேண்டும் என்று சிவபாக்யத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் சிவபாக்யத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 20 கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து இறந்து போன மகளை நினைத்து கதறி அழுத சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.